வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

படித்ததில் பிடித்தது...

          பாகிஸ்தான்: அடையாளம் தேடும் நாடு.

     எழுதியவர்: முபாரக் அலி. பாகிஸ்தானின் வரலாற்று பேராசிரியர்!

                           தமிழில்: மொழிபெயர்ப்பு: நா.தருமராஜன்.

                                                 வெளியீடு: என்.சி.பி.எச்.

     வரலாறுகள் சிதைக்கப்படாமல் ஆணித்தரமாக எழுதப்பட்டால்தான் பின்னோக்கிப் பார்த்து முன்னோக்கிச் செல்லும் புதிய சமுதாயம் உருவாகும் என்பது இந்நூலின் அடிப்படைக்கருத்து  ---  இது பதிப்புரை.

    முனைவர் முபாரக் அலி தொழில்முறை வரலாற்றாசிரியர்களிடமிருந்து தனித்து, மசூதிகள், மற்றும் அரசவைகளில் மையம் கொண்டிருந்த பாகிஸ்தானின் வரலாற்றை சாதாரண மக்களை நோக்கித் திருப்பினார். தெளிவான நடையில் வரலாற்று நூல்களை எழுதினார் -- மாணவர்களும் அரசியல்வாதிகளும் விரும்பும் வண்ணம்! அதிகாரபூர்வ வரலாறுகளில் உள்ள தவறுகளையும் பிரச்சாரத்தையும் வன்மையாக விமர்சனம் செய்திருக்கிறார். அரசு என்ற கவசத்தை அணிந்துகொண்டால் வரலாறு தன்னுடைய படைப்புத் திறனை இழந்துவிடுகிறது என்றும் மக்களுடைய சிந்தனா சக்தியை தூண்டுவதற்குப் பதிலாக அதை உறைய வைக்கிறது என்றும் சொல்கிறார்.
                                        --- இது:  முனைவர் ஸையது ஜாபர் அஹமது
                                                           கராச்சி பல்கலைக்கழகம், கராச்சி.

    இந்த புத்தகத்தின் வெறும் 140 பக்கங்களில் மிகவும் நேர்த்தியாக,தெளிவான நடையில் தமது நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும் இருக்கின்ற நிலையினை எடுத்துக் கூறுகிறார் முபாரக் அலி. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற பிறகு வந்த அரசின் தலைவர்களும் அதன்பின் அடுத்தடுத்து வந்த அரசுகளின் பொறுப்பாளர்களும் தங்களின் சிறு சரிவுகளுக்குக்கூட  மதத்தையும் மதத் தலைவர்களின் தொடர்புகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு, அதிகாரத்தைத் தங்கள் கையிலிருந்து  செல்லவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அந்நாட்டின் மதம்தான் முக்கியம்; அதனால் மதவழி மீறாமல் அதன்வழியே ஆட்சி நடத்துவது போன்ற பாவனையை ஏற்படுத்தி மதத்தலைவர்களை திருப்தி செய்து, அவர்களை வைத்தே எளிதில் உணர்ச்சி வசப்படுகின்ற மக்களைக் கட்டுப்படுத்தி அரசியல்வாதிகள் தங்கள் நலனைக் காப்பாற்றிக்கொள்ளுகிறார்கள்; அதே நேரத்தில் மதவாதிகளும் மதத்தையும் மக்களையும் காட்டிக்காட்டி அரசியல்வாதிகளை தங்கள் வசம் பிடித்துவைத்திருக்கிறார்கள்.

                                                             மேற்கண்ட நிலை தொடர்ந்தபோது அரசியல்வாதிகளின் தகுதிகள் குறையத் துவங்கி மதவாதிகளின் கை ஓங்கி மதத்தின் பல வலுப்பெற்ற உட்பிரிவுகள் தாங்களே பல மதவாதக் கட்சிகளைத் துவக்கிக்கொண்டன; மக்களின் மத உணர்ச்சிகளைத் தூண்டி ஆட்சியதிகாரம் பெற மதம் விரும்புகிறது; அரசியலும் மதமும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் ஒன்றுக்கொன்று குழி பறிக்கின்றன.

                   இஸ்லாமிய மத போதனைகளில் எந்த புதிய விளக்கங்களும் புதிய மாற்றங்களும் ஏற்க்கப்படக்கூடாது என்பதில் பாகிஸ்தானிய மதவாதிகள் மிகத் தெளிவாக உள்ளார்கள்; அதிலும் இந்திய இஸ்லாமிய அறிஞர்களின் எந்த புதிய விளக்கங்களும் தவறிக்கூட தங்கள் நாட்டில் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

              மேலும், இந்நூலில் பாகிஸ்தானில் ஒவ்வொரு அரசும் எவ்வாறெல்லாம் மதத்தைப் பயன்படுத்தின என்றும்,  ஒவ்வொரு சர்வாதிகாரியும் எப்படி  மதத்தைப் பயன்படுத்தினர் என்றும், அந்நாட்டிற்கான வரலாற்றை அமெரிக்கர்களை வைத்து எழுதியதையும், இந்தியா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளை மாற்றி எழுதுவதையும் தமது பாகிஸ்தானின் வரலாற்றைத் தங்களவர்களே  தவறாகத் திரிப்பதையும் எழுதி மனம் புழுங்குகிறார் அதன் ஆசிரியர் முனைவர்.முபாரக் அலி!
   
 மதத்தைக் கைக்கொண்ட எந்த ஒரு நாடும் இப்படித்தான் இருக்கும் என்றும், நமது நாட்டில்கூட ஒரு சில வேற்று மதவெறியர்களின் செயல்களுக்காக மாற்று மதவெறியின் ஆட்சி தேவையா என்று அச்சம் ஏற்படுவது இயல்புதானே!  நன்றி!
  
  இது கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக